மேலூர் சேனல் ரோட்டில் உழவர் சந்தையை மாற்ற முடிவு செய்து அதற்கான இடத்தை கலெக்டர் உட்பட அதிகாரிகள் பார்வையிட்டனர்.
சந்தைபேட்டையில் உபயோகமற்று கிடக்கும் மேலூர் உழவர் சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கை உள்ளது. மாற்று இடத்திற்காக பல இடங்களை பார்வையிட்டும் எவ்வித முடிவும் எட்டப் படவில்லை. தற்போது அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள சேனல் ரோட்டில் பெரியாற்று கால்வாயை ஒட்டி பொதுப் பணித் துறைக்கு சொந்தமான இடம் உழவர் சந்தைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இங்கு 5000 சதுர அடியில் 30 முதல் 40 கடைகள் கட்டலாம் என்று தெரிகிறது. கலெக்டர் மதிவாணன், வேளாண் துறை இயக்குனர் சிதம்பரம், மதுரை விற்பனை குழு செயலாளர் பாஸ்கர் ராஜா, தாசில்தார் சுப்பு, நகராட்சி கமிஷனர்(பொறுப்பு) கார்த்திகேயன், நகர் செயலாளர் சேட் ஆகியோர் அவ்விடத்தை பார்வையிட்டனர். ரெவின்யூ தரப்பில் அந்த இடத்தை அளந்து, திட்ட மதிப்பீடு செய்து கலெக்டர் பார்வைக்கு அனுப்பிய பிறகு அவ்விடத்தில் உழவர் சந்தை அமையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


