பள்ளி டிரைவர் மீது தவறா?: சமீபகாலமாக பள்ளி வாகனங்கள் விபத்துக்களில் சிக்குவது தொடர் கதையாக உள்ளது. போதிய அனுபவமின்மை, அதிவேகம், கவனக்குறைவு, போக்குவரத்து விதிமுறைகள் குறித்து அறியாமை, போன்ற காரணங்களால் விபத்துகள் நடக்கின்றன. நேற்று நடந்த விபத்தில், "பள்ளி டிரைவர் மீது தவறு இருக்கலாம்' என, ஒத்தக்கடை போலீசார் சந்தேகித்துள்ளனர். வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோது, பஸ் மீது வேன் மோதியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.
டிச.,3ல் வேதாரண்யத்தில் பள்ளி வேன் குளத்தில் மூழ்கியதில் 9 மாணவர்கள், ஒரு ஆசிரியை பலியாயினர். அதேநாளில் நாகப்பட்டிணம் அருகே, பள்ளி வேன் மரத்தில் மோதியது. இதைதொடர்ந்து பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. மதுரை நகரில் உள்ள பள்ளி வாகனங்களின் ஆவணங்கள் மற்றும் டிரைவர்களின் ஆவணங்களை டிச., 10ல் போலீசார், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். புறநகரில் இந்த ஆய்வு மேற்கொள்ளவில்லை. உடனடியாக ஆய்வு செய்தால் மட்டுமே, பள்ளி வாகனங்கள் விபத்தில் சிக்குவதை தவிர்க்க முடியும்.


