கொட்டாம்பட்டி தொந்தி லிங்கபுரம் பகுதியை சேர்ந்த வர் தமிழ்செல்வி. இவருடைய உறவினர் விஜயா. இவர்கள் இருவருக்கும் நீண்ட காலமாக இடத்தகராறு பிரச்சினை உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இடத்தகராறு பிரச்சினை மீண்டும் வெடித்தது. இதில் இரு தரப்பை சேர்ந்தவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தனர். இது குறித்து தமிழ்செல்வி கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்நிலையில் அதே ஊரில் வசிக்கும் தமிழ்செல்வியின் தங்கை சுமதி வயல்வெளிக்கு சென்று மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப் போது விஜயாவின் தம்பி செந்தில்குமார், உறவினர்கள் ராஜ்குமார், விஜயகுமார் உள்பட 4 பேர் சுமதியிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டனர்.
திடீரென செந்தில்குமார் உள்பட 4 பேரும் சுமதியை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றதாக தெரிகிறது. இதனால் சுமதி கூச்சல் போட்டார். கூச்சல் சத்தம் கேட்டு அவரை காப்பாற்ற வந்த சுமதியின் மாமனார் சின்னையாவுக் கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
இதை தடுக்க வந்த சுமதியின் கணவர் குமரேச னையும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கி விட்டு சென்றது. படுகாயம் அடைந்த 3 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து தமிழ்செல்வி கொட்டாம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற 4 பேரை தேடி வருகின்றனர். இதே போல் தங்களை தாக்கியதாக விஜயா தரப்பினரும் போலீசில் புகார் செய்துள்ளனர்.


