தமிழகம் முழுதும் போலி ரேஷன் கார்டுகளை நீக்குவதற்கான பணி நான்கு மாதங்களுக்கு முன் நடந்தது. கொட்டாம் பட்டியில் கடந்த அக்டோபரில் மேலூரிலிருந்து தனியார் பள்ளி ஆசிரியர்கள் இருவர் இப்பணிகளை மேற் கொண்டனர். நேற்று கொட்டாம் பட்டி ரேஷன் கடையில் 370 கார்டுகள் போலிகள் என
பட்டியல் ஒட்டப்பட்டது. இதைப்பார்த்த பொதுமக்கள்," தங்கள் பகுதிக்கு தணிக்கைக்கே வராமல் எப்படி எங்களது கார்டை நீக்கலாம்,' என, கூறி ரேஷன் கடையை முற்றுகை இட்டனர். ரேஷன்கடை ஊழியர் ஜெயபால் கூறியதாவது: தணிக்கை செய்ய வந்தவர்களுக்கு இப்பகுதி புதிது என்பதால் ஐந்து மற்றும் ஆறாவது வார்டுகள் முழுவதும் தணிக்கை செய்யாமல் விடுபட்டுள்ளது. ஒட்டப் பட்டிருக்கும் லிஸ்ட்டில் உள்ள கார்டு தாரர்கள் விண்ணப்பத்துடன், வாக்காளர் அடையாள அட்டையின் நகல், ரேஷன் கார்டு ஜெராக்ஸ் ஆகியவற்றை இணைத்து என்னிடம் வழங்கி புதுப் பித்துக் கொள்ளலாம், என்றார். பொதுமக்கள் சிலர் கூறியதாவது: இது போன்ற பணிகளில் ஈடுபடுத்தப் படுபவர்கள் அப்பகுதியைப் பற்றி நன்கு அறிந்தவர்களாக இருந்தால் இந்த
குளறுபடி நடந்திருக்காது. இனிமேலாவது இதுபோல தவறுகள் நிகழாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்''என்றனர்.


