மேலூர் அருகே தும்பைபட்டியில் முன்னாள் அமைச்சர் கக்கன் நினைவு தினத்தையொட்டி அரசு சார்பில் அமைச்சர் தமிழரசி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் அமைச்சர் கக்கன் 23ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மேலூர் அருகே தும்பைபட்டியில் அவரது நினைவிடத்தில் உள்ள சிலைக்கு தமிழக அரசு சார்பில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். டிஆர்ஓ தினேஷ் ஆலிவர் பொன்ராஜ், மேலூர் தாசில்தார் சுப்பு, தும்பைப்பட்டி ஊராட்சித் தலைவர் பழனியப்பன் உடன் சென்றனர். திமுக சார்பில் நகர செயலாளர் முகமது இபுராகிம் சேட், ஒன்றிய செயலாளர்கள் ரகுபதி, துரைராஜேந்திரன், நகராட்சித் தலைவர் தமிழரசி, ஊராட்சி ஒன்றியத் தலைவர் அழகுபாண்டி உள்பட பலர் மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் சார்பில் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர் திலகராஜ் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சுந்தர்ராஜன் உள்பட பலர் மாலை அணிவித்தனர்.
அதிமுக சார்பில் சாமி எம்எல்ஏ தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஊர்வலமாகச் சென்று கக்கன் சிலைக்கு மரியாதை செலுத்தினர். ஒன்றிய செயலாளர்கள் வெற்றிச் செழியன், செல்வராஜ், நகர் செயலாளர் நாகசுப்பிரமணி உள்ளிட்டோர் உடன் சென்றனர். மதிமுக சார்பில் மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் வீர.தமிழ்செல்வன், நகர் செயலாளர் விஜயராகவன் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


