தமிழ்நாடு முழுதும் தற்போது வாக்காளர் கணக்கெடுக்கும் பணிநடக்கிறது. டிச. இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட இப்பணியில், கொட்டாம்பட்டி பகுதியில் ஈடுபட்டுள்ளோர் மிகுந்த பிரச்னைகளைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பணிகளில் ஈடுபட்டுள்ள சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களில் சிலர் இதுபற்றி கூறியதாவது: கணக்கெடுக்க தேவையான, அட்டை, பேனா, பசை, ஸ்டாம்ப்பேடு உள்ளிட்ட தளவாடச் சாமான்கள் வழங்கவில்லை. விடுபட்ட மற்றும் புதிதாக சேர்க்கும் வாக்காளர்களுக்கான படிவம் 6 இதுவரை வழங்கப்படவில்லை. கணக்கெடுப்பவர்கள் கண்டிப்பாக அடையாள அட்டையுடன் தான் பணியில் ஈடுபடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு, அவர்களிடம் இருந்து பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் பெறப்பட்டது. ஆனால் பணி தொடங்கி 2 வாரங்கள் ஆகியும், இதுவரை சிலருக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை. இதற்காக, வி.ஏ.ஓ.,வை தொடர்பு கொள்ள ஒருவாரமாக முயற்சித்தும் அவரை இதுவரை சந்திக்கமுடியவில்லை. இதனால் எங்களது பணி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, என்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியாளர்களுக்கு தேவையான வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும்.


