மேலூர் அருகில் உள்ளது சருகுவலையபட்டி, வலையபட்டி கிராமங்கள். இப்பகுதியில் உள்ளவர்கள் அடிக்கடி முயல், கொக்கு போன்றவைகளை வேட்டை ஆட செல்வது வழக்கம். இதனால் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது 3 நாய்கள் வரை வளர்க்கின்றனர். 8000 பேர் வசிக்கும் இக்கிராமத்தில் தற்போது 2000த்திற்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளது. பல நாய்கள் உணவின்றி தெருக்களில் அலைகின்றது. இவைகளில் சிலவற்றிற்கு வெறி பிடித்துள்ளது. கடந்த வாரம் ஒரே நாளில் வெறி பிடித்த நாய் ஒன்று 10க்கும் மேற்பட்ட ஆட்களையும், சில மாடுகளையும் கடித்துள்ளது. கடிபட்ட அனைவரும் மதுரை, மேலூர் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
சிகிச்சைக்கு பிறகும் டிச. 24ல் வடக்கு வலையபட்டியை சேர்ந்த அழகம்மாள்(50) இறந்துள்ளார். டிச. 28ல் அதே ஊரைச் சேர்ந்த அழகி(45) இறந்தார். இத்துடன் ராமன், அழகர்சாமி என்பவர்களின் மாடுகளும் அடுத்தடுத்து இறந்தது. தற்போது தீவிர சிகிச்சையில் அழகம்மாள், அம்மாசி, அழகர்சாமி, அழகி உட்பட சிலர் உள்ளனர். இதனால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். இப்பகுதி தி.மு.க., கிளைச் செயலர்கள் ஜெயபால், சந்திரன் தலைமையில் யூனியன் பி.டி.ஓ., உட்பட அரசு அதிகாரிகளுக்கு இது குறித்து மனுக்கள் கொடுத்துள்ளனர். அதிகரித்துள்ள நாய்களை அப்புறப்படுத்தி, வீடுகளில் நாய் வளர்ப்பவர்கள் ஊராட்சியிடம் அனுமதி பெற்று வளர்க்க ஏற்பாடு செய்தால் இப் பிரச்னையை தீர்க்கலாம்.


